அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காஸா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் நாடு கடத்தப்பட்டனர். மேலும், இதைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவித்தது. தொடர்ந்து, பல மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தியதையும் நிராகரித்தது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் ட்ரம்ப் அரசின் கோரிக்கைகளை நிராகரித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. மேலும், ’வரி விதிப்போம்’ என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது. தவிர, “மக்களின் வரிப் பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுறுத்தி இருந்தது. இதுகுறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ”ட்ரம்பின் இந்தச் செயல்பாடு, கல்விச் சுதந்திரத்தை நசுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிதி உதவி நிறுத்தியது தொடர்பாக, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசாங்கம் தனது நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.