Benjamin Netanyahu
Benjamin Netanyahu pt web
உலகம்

”நீ விதைத்த வினையெல்லாம் உன்னை..!” - பணம் கொட்டி வளர்த்த இஸ்ரேல் அரசு.. கத்தியை திருப்பிய ஹமாஸ்!

Angeshwar G

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் இஸ்ரேல் காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களையும் விட்டுவைக்காமல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேல் முழு மூச்சோடு காஸா மீது தாக்குதல் நடத்துவது என்னவோ சரிதான். ஆனால் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு ஒருகாலத்தில் ஹமாஸ்க்கு செய்த நிதியுதவியும் ஹமாஸின் தற்போதைய பலத்திற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்

நெதன்யாகுவிற்கு பாலஸ்தீன் என்ற தனி நாடு உருவாவதில் பிரச்சனை. அதைத் தடுக்கும் ஒற்றை நோக்கத்துடனே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டிந்த செய்திக் குறிப்பில், “பாராளுமன்ற குழு உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இறையான்மை கொண்ட அரசை நிறுவுவதற்கான பாலஸ்தீனிய நம்பிக்கைகள் அகற்றப்பட வேண்டும் என கூறினார்” என தெரிவித்துள்ளது.

அந்த செய்திக் குறிப்பின் சாராம்சம் என்னவெனில், பாலஸ்தீனிய அதிகாரம் வலுப்பெறவோ அல்லது சரிவதையோ அனுமதிக்க கூடாது. ஹமாஸ் - பாலஸ்தீன் என்ற இரண்டு அதிகார மையங்களையும் தனித்தனியே வைத்திருக்க வேண்டும் என்பது தான்.

ஹமாஸிடம் பல்வேறு நிதி ஆதாரங்கள் இருந்தாலும் கத்தாரின் பணமே பிரதானமானது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் டாலரை, காஸாவின் மின் உற்பத்தி நிலையத்திற்கும், ஹமாஸின் கீழ் உள்ள ஏழைக்குடும்பங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் உதவுவதற்காகவும் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்பு கத்தாரின் பணம் பாலஸ்தீனம் வழியாக மாற்றப்பட்டு வந்த நிலையில் பின் இஸ்ரேல் வழியாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் கத்தார் பணம் அனுப்பினால் இஸ்ரேல் மற்றும் ஐநாவின் அதிகாரிகள் சூட்கேஸ்களில் காஸாவிற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கிறது இண்டியா டுடே செய்திக் குறிப்பு.

hamas

இது ஒருபுறமென்றால் காஸா மக்களுக்கு வழங்கப்படும் வேலைக்கான அனுமதிகள் கடந்த 2 ஆண்டுகளில் பல மடங்குகள் அதிகரித்துள்ளன. இதன்படி வேலைக்காக இஸ்ரேலுக்குள் செல்லும் ஊழியர்கள் நாள் முடிவதற்குள் திரும்ப வேண்டும். 2021 ஆம் ஆண்டு 3000 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் கத்தாரின் பணத்தை காஸாவிற்கு அனுப்பும் போதெல்லாம் ஹமாஸ் பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பை வலுப்படுத்தியது, இவை அனைத்தும் ஹமாஸ் வலுவானதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர் போர் சூழல் காரணமாக நெதன்யாகு உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இத்தகைய சூழலில் பாலஸ்தீன் ஹமாஸ் விவகாரத்தில் அவர் எத்தைகைய முடிவெடுக்கப்போகிறார் என்பது தற்போது வரை கேள்விக் குறியாக உள்ளது.