இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் சமீபத்திய திருப்பமாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் (பாலஸ்தீன ஆதரவு) நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த நிலையில், காஸாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர்.
இதை, இஸ்ரேல் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் பிடித்திருந்த 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இதனிடையே, காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை வரும் 25ஆம் தேதி விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட ஒருநாள் தாமதமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகளின் அதிகாரி ஒருவர் கூறிய நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, வரும் வாரங்களில் 90க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஏற்கனவே மூவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து தற்போது நால்வரை விடுவிக்க ஹமாஸ் படைகள் தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவலை இஸ்ரேல் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.