பிணைக் கைதிகள் முகநூல்
உலகம்

மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களிடம், ரோமி கோனென், (romi gonen) டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர், (doron steinbrecher) எமிலி டமரி (emily damari)ஆகிய பெண் பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

PT WEB

போர் நிறுத்த ஒப்பந்தப்படி முதற்கட்டமாக மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களிடம், ரோமி கோனென், (romi gonen) டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர், (doron steinbrecher) எமிலி டமரி (emily damari)ஆகிய பெண் பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது மூவரும் ஏறிய காரை சூழ்ந்துகொண்டு, முகமூடி மற்றும் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் போராளிகள் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் 3 பேரும் இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள ரமட் கான் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு திரண்டிருந்த மக்கள், பிணைக் கைதிகளை நோக்கி கையசைத்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல், மூவரின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி இஸ்ரேல் மக்கள் அனைவரும் பிணைக் கைதிகள் விடுவிப்பை கொண்டாடி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய 33 பிணைக் கைதிகளில் முதற்கட்டமாக 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி பதிலுக்கு பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.