காஸா முகநூல்
உலகம்

காஸாவில் அரசாங்கம் கலைப்பு.. ஹமாஸ் எடுத்த அதிரடி முடிவு.. அடுத்து நடக்கப்போவது என்ன?

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் நீடித்த இந்தப் போரில், அங்கு 73,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Prakash J

காஸாவில் தனது அரசாங்கத்தைக் கலைத்துவிட்டதாகவும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தொழில்நுட்பக் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் காஸாவை, 2007 முதல் ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வருகின்றனர். அதேநேரத்தில், காஸாவை ஆக்கிரமிக்கவும் இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகையால், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் நீடித்த இந்தப் போரில், அங்கு இதுவரை 73,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்

இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இஸ்ரேல் ஆதரவுடன், ’ட்ரம்பின் தலைமையில் இடைக்கால அரசு’ என்பது உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தை, காஸா போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா முன்மொழிந்தது. இதற்கு ஹமாஸ் அமைப்பு ஆதரவு தெரிவிக்காமல் சற்று விலகியே இருக்கும் நிலையில், அதன் ஆயுதக் களைவு குறித்த கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில்தான், காஸாவில் தனது அரசாங்கத்தைக் கலைத்துவிட்டதாகவும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தொழில்நுட்பக் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை காஸாவில் ஹமாஸ் தனது அரசியல் அல்லது இராணுவப் பங்கைக் கைவிடுகிறது என்று பொருளல்ல, மாறாக, காஸாவில் உள்ள நேரடி குடிமை அரசாங்கத்திலிருந்து பின்வாங்குவதாகும் என விளக்கமளித்துள்ளது.