H1b visa  web
உலகம்

H-1B விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு? புதிய மசோதா தாக்கல்.. இந்தியர்களுக்குச் சிக்கல்?

எச்-1பி விசா முறைகேடு தடுப்புச் சட்டம் ( End H-1B Visa Abuse Act of 2026 ) என்ற புதிய மசோதா ஏப்ரல் 22 , 2026 அன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

எச்-1பி விசா முறைகேடு தடுப்புச் சட்டம் 2026 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் எலி கிரேன் தாக்கல் செய்துள்ளார். இது H-1B விசா திட்டத்தின் எதிர்காலம் குறித்துப் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Eli crane

தற்போதைய விசா முறையை முழுமையாக மாற்றியமைப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் உள்நாட்டுத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், எச்-1பி விசாக்களுக்கு 3 ஆண்டுகளுக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைக்கும் நோக்கில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அரசு லாபம் ஈட்டும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, கடினமாக உழைக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மசோதா அறிமுகபடுத்தப்ப்ட்டதாக இதனை தாக்கல் செய்த எலி கிரேன் கூறியுள்ளார். தற்போது ஆண்டுதோறும் 65,000 H-1B விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 25,000 ஆகக் குறைப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

indians in USA

தற்போதைய குலுக்கல் முறைக்குப் பதிலாக அதிக சம்பளத்தின் அடிப்படையில் விசாக்களை வழங்கும் முறையைக் கொண்டுவரவும், குறைந்தபட்ச சம்பளத்தை ஆண்டுக்கு $2,00,000 அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.8 கோடி என நிர்ணயிக்கவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

வெளிநாட்டவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அந்த குறிப்பிட்ட வேலையை நிரப்ப தகுதியான பணியாளர் ஒருவரை அமெரிக்காவில் கண்டடைய முடியவில்லை என்று நிறுவனங்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலையில் அமர்த்த அமெரிக்க பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.

indians at Times Square

H-1B விசா வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யக் கூடாது என்றும், மூன்றாம் தரப்பு ஏஜென்சிகள் மூலம் வேலைக்கு தேர்வு செய்யபப்டுவதும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் இந்த மசோதா கூறுகிறது.

மேலும், H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வருவதைத் தடை செய்தல், மாணவர்கள் பணி அனுபவம் பெற உதவும் விருப்பப் பயிற்சி (OPT) திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் விசா வைத்திருப்பவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு மாறுவதைத் தடுத்தல் போன்ற விதிமுறைகளும் இந்த மசோதாவில் அடங்கும்.

trump

H-1B விசாத் திட்டமானது, அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது. இதுவரையில், இந்தியர்களே H-1B விசாக்களின் மூலம் அதிக அளவில் பயனடைந்து வந்துள்ளனர். இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.