உலகம்

அமேசான் பழங்குடியினருக்கு தனது பரிசுத்தொகையில் 4 கோடி ரூபாய் அளித்த கிரேட்டா தன்பெர்க்!

அமேசான் பழங்குடியினருக்கு தனது பரிசுத்தொகையில் 4 கோடி ரூபாய் அளித்த கிரேட்டா தன்பெர்க்!

sharpana

சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்கிற்கு, வருடந்தோறும் வழங்கப்படும் போர்த்துக்கீசிய நாட்டின் மனிதநேயத்துக்கான  ‘காலுஸ்டே குல்பென்கியான் விருது’ நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.  விருதோடு  11 மில்லியன் யூரோ பரிசுத் தொகையாக கிரேட்டாவுக்கு வழங்கப்பட்டது. அதில், 4 கோடி ரூபாய் தொகையை பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கவும் மழை தரும் காடுகளை பராமரிக்கவும், அங்குள்ள  எஸ்.ஓ.எஸ். அமேசானியா ட்ரஸ்டிற்கு நிதியுதவி அளித்துள்ளார்.

46 நாடுகளைச்சேர்ந்த சுற்றுச்சூழலில் ஆர்வத்தோடு செயல்படும் 136 சிறுவர்களில் 3 பேருக்கு மட்டுமே, இவ்விருது கிடைத்தது. அதில், கிரேட்டா தன்பெர்க்கும் ஒருவர். இதில், கிடைத்த பரிசுத்தொகையைத்தான் பழங்குடியின மக்கள் மற்றும் காடுகளின் பாதுகாப்புக்காக வழங்கினார். ஏற்கெனவே, கிரேட்டா தன்பெர்க் கொரோனா தொற்றுநோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க யுனிசெஃப் நிறுவனத்துக்கு  1 லட்சம் டாலர் நிதியுதவி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “இது, நான் கற்பனை செய்யமுடியாத அளவுக்கான பரிசுத்தொகை. எனக்கு, கிடைக்கும் அனைத்து பரிசுத்தொகையையும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு என்.ஜி.ஓக்களுக்கு நன்கொடையாக அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.