க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் அமெரிக்காவுக்குள் வந்துசெல்ல எந்தவிதமான தடையும் இல்லை என்று அந்நாடு விளக்கமளித்துள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, லிபியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 3 மாதங்கள் தடை விதித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும், அகதிகளையும் ஏற்கப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர், இந்த தடை உத்தரவு நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் நாட்டுக்குள் வர சிறப்பு அனுமதி எதுவும் பெறவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.