KC-390 Millennium reuters
உலகம்

ரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. இந்தியாவுக்கு முன்பே முந்திக்கொண்ட கிரீஸ்.. மெகா ஒப்பந்தம்!

கிரீஸ் நாடு தனது விமானப்படைக்காக பிரேசிலின் எம்பிரேயர் (Embraer) நிறுவனம் தயாரிக்கும் 3 'கே.சி.-390 மில்லேனியம்' (KC-390 Millennium) ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

Prakash J

ஐரோப்பிய நாடான கிரீஸ் தனது விமானப்படைக்காக பிரேசிலின் எம்பிரேயர் (Embraer) நிறுவனம் தயாரிக்கும் 3 'கே.சி.-390 மில்லேனியம்' (KC-390 Millennium) ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் இந்த விமானங்கள் வாங்கப்பட இருக்கின்றன. தவிர, மேலும் 3 விமானங்களை வாங்கிக்கொள்ளும் விருப்பத்தேர்வும் இதில் உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் €590 மில்லியன் (யூரோ) ஆகும். முதல் விமானம் 2027-ஆம் ஆண்டில் கிரேக்க விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். அடுத்தடுத்த விமானங்கள் 2029 மற்றும் 2031-ல் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் விமானங்கள் மட்டுமின்றி, போர்ச்சுகல் நாட்டில் விமானிகளுக்கான பயிற்சி, மின்னணு போர் சாதனங்கள், பராமரிப்பு மற்றும் தளவாட ஆதரவு ஆகியவையும் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்த எம்ப்ரேயர் கே.சி.-390 விமானத்தைத் தேர்ந்தெடுத்த 7-ஆவது ஐரோப்பிய நாடாக கிரேக்கம் மாறியுள்ளது. ஏற்கெனவே போர்ச்சுகல், ஹங்கேரி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த விமானத்தைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவிற்கு வெளியே, இது பிரேசில், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளால் இயக்கப்படுகிறது. மேலும், எம்ப்ரேயரின் KC-390 மில்லினியம் ரக விமானத்தைத் தேர்ந்தெடுத்த சமீபத்திய ஐரோப்பிய நாடாக மாறியிருக்கும் கிரீஸ், தனது கிரேக்க விமானப்படையின் வான்வழிப் போக்குவரத்து மற்றும் வானில் இருந்து வானில் எரிபொருள் நிரப்பும் திறன்களை அதிகரிப்பதோடு, நேட்டோ மற்றும் அதன் நட்புப் படைகளுடனான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த உள்ளது.

இந்த விமானம் 26 டன் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 470 நாட்ஸ் வேகம் வரை பறக்கும். மேலும் தற்காலிக அல்லது செப்பனிடப்படாத ஓடு பாதைகளில் இருந்தும் செயல்படக்கூடியது. இதற்கிடையே, இந்தியாவும் அதே ரக விமானங்களை வாங்கத் தயாராகி வரும் வேளையில், கிரீஸின் இந்த ஆர்டர் வந்துள்ளது. ஆகஸ்ட் மாதம், இந்திய விமானப் படைக்காக 60 நடுத்தர போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான முன்மொழிவு கோரிக்கையை வெளியிட்டது.