'ஒரு நாளில் ஒபாமா ஆகமுடியாது' என்று விளையாட்டாக சொல்வார்கள். ஆனால் இணைய உலகத்தை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும் ஒரு நாளில் புகழுக்கு சென்றுவிடலாம் என்ற நிலை உள்ளது. நேர்மறையோ, எதிர்மறையோ எத்தனையோ ஆட்களை இணைய உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காட்டுகிறது. வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காக செய்யப்படும் ‘டிக் டாக்’ வீடியோக்கள் என இணையத்தில் எப்போது எதுவெல்லாம் புகழடையும் என்று சொல்வதற்கில்லை.
ஸ்காட்லாந்தில் தன்னுடைய தாத்தாவின் கியூட் ரியாக்ஷனை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் ட்விட்டரில் விளையாட்டாக அப்லோட் செய்ய அது தற்போது வைரலாகியுள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் பார்கிலே. இவர் தனது 87 வயதான தாத்தாவை பார்க்க அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வாயிற்கதவை அந்த 87 வயது தாத்தா அத்தனை மகிழ்ச்சியாக திறந்து, தனது பேத்தியை வரவேற்கிறார். தான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் தனது தாத்தாவின் இந்த க்யூட் வரவேற்பை ஜெனிபர் வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அனைத்து வீடியோக்களையும் ஒன்றினைத்து ஒரு நிமிட வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜெனிபர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை பதிவிட்ட ஜெனிபர் ''என்னுடைய 87 வயதான இளம் தாத்தா. அவர் மீது நான் அதிக அன்பு வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு முறை அவரின் வீட்டுக்குச் செல்லும் போதும் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளை நான் வீடியோவாக எடுத்துள்ளேன். இது எல்லாருக்கும் பிடிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
My wee Grandad, 87 years young and he’s my no.1 guy