உலகில் அதிக உயிரிழப்புக்கு காரணமான கொசுக்களை கட்டுப்படுத்த, கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் 3.2 கோடி ஆய்வக ஆண் ஏடிஸ் கொசுக்களை வெளிப்புற சூழலில் விட திட்டமிட்டுள்ளது. வோல்பாக்கியா பாக்டீரியா செலுத்தப்பட்ட இக்கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணையும் போது முட்டைகள் பொரிக்காமல் போகும். இதனால் டெங்கு, மலேரியா, ஜிகா போன்ற நோய்களின் பரவலை வேதிப்பொருட்கள் இன்றி குறைப்பதே நோக்கம்.
செய்தியாளர்: M. மீரா
உலகின் மிக ஆபத்தான உயிரினமான கொசுக்கள், டெங்கு, வெஸ்ட் நைல் வைரஸ், ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களைப் பரப்புவதன் மூலம், ஆண்டுதோறும் உலகில் உள்ள மற்ற எந்த உயிரினத்தையும் விட அதிக எண்ணிக்கையில் மனிதர்களின் உயிரைப் பறிக்கின்றன.
கொசுக்களால் அதிகரித்து வரும் கொடிய நோய்களை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்துறை பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. கொடிய நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக 3.2 கோடி கொசுக்களை அதாவது கொசுப் படை ஒன்றை களம் இறக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கூகுள் (google) நிறுவனத்தின் தாய் நிறுவமான ஆல்பபெட் (Alphabet) கொசுக்களை ஒழிப்பதற்கு ஒரு புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளது.
கொசுக்களால் பரவும் அபாயகரமான நோய்களை ஆண் கொசுக்கள் மூலம் முற்றும் ஒழிப்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கம் ஆகும். ஆண் கொசுக்களை பயன்படுத்தி கொசுக்களால் பரவும் உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கவும், அவற்றை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆண் ஏடிஸ் கொசுக்களில் வோல்பாக்கியா (Wolbachia) என்ற இயற்கை பாக்டீரியா செலுத்தப்படுகிறது. ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதில்லை என்பதால், அவற்றால் நேரடியாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, 3.2 கோடி ஆண் கொசுக்களை வெளிப்புற சூழலில் விடுவித்தாலும், மனிதர்களுக்கு நோய் பரவல் அல்லது உடல்நல ஆபத்து ஏற்படாது என்று கூகுள் நிறுவனம் விளக்கியுள்ளது.
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆண் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் இணைந்து, அதன் மூலம் உருவாகும் முட்டைகள் பொரிக்கும் திறனை இழந்து விடும். இதனால் அடுத்தடுத்த தலைமுறைகளில் கொசுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறைந்து, டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களின் பரவல் முற்றிலுமாக தடுக்கப்படும்.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 3.2 கோடி ஆண் கொசுக்களை ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் பறக்க விட்டு சோதனை நடத்த அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது கூகுளின் ஆல்பபெட் நிறுவனம். இந்த கோரிக்கை குறித்து தற்போது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை பரிசீலித்து வருகிறது.
இவ்வாரு பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை மலடாக்கும் தொழில்நுட்பம் ஒன்றும் புதியதல்ல; பல தசாப்தங்களாகவே இது வேதிப்பொருட்கள் அற்ற ஒரு மாற்று வழியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள், வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளின் திறந்த காயங்களுக்குள் ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்தும் 'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவார்ம்' (New World screwworm) எனப்படும் ஈயின் புழுக்களைக் கட்டுப்படுத்த இம்முறை முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி பழ ஈ (Mediterranean fruit fly) எதிராகவும் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.