உலகம்

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு - ரூ.920 கோடி இழப்பீடாக வழங்க கூகுள் முடிவு!

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு - ரூ.920 கோடி இழப்பீடாக வழங்க கூகுள் முடிவு!

ச. முத்துகிருஷ்ணன்

கூகுள் நிறுவனம் பெண் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு 118 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15 ஆயிரத்து 500 பெண் பணியாளர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்குவதாக கூகுள்நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே விதமான பதவிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாகவும், அவர்களுக்கு தகுதி குறைவான பணிகளே வழங்கப்பட்டதாகவும், கடந்த 2017-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் பணியாளர்கள் மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர். கலிஃபோர்னியாவின் சம ஊதியச் சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினர், இதனால் கூகுள் நிறுவனம் 118 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 920 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள விசாரணையில், கூகுள் வழங்க முன்வந்த இழப்பீடு நீதிபதியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலின பாகுபாட்டிற்காக கூகுள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பெண் பொறியாளர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் ஆசிய வேலை விண்ணப்பதாரர்களை சரியாக நடத்தவில்லை என்று கூறி ஒரு வழக்கைத் தீர்ப்பதற்கு $2.5 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.