Crude Oil price decline gold price  Reuters
உலகம்

5 மாதங்களில் இல்லாத நிகழ்வு : சட்டென சரிந்த தங்கத்தின் விலை... அடுத்து நடக்கும் மாற்றம் என்ன ?

கச்சா எண்ணெய் விலையில் 5 மாதங்களில் இல்லாத மாற்றமே தங்கத்தின் விலை கடுமையாக சரிந்ததற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Praveen Joshva L

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க வட்டி விகித உயர்வு காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில் கடுமையாக சரிந்தது. தங்க முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அமெரிக்க பத்திரங்களில் மாற்றியதால் இந்த மாற்றம் ஏற்பட்டது. விலை சரிவு சில நாட்களுக்கு தொடரும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்த ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தேவை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக குறைந்தது.

இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 அமெரிக்க டாலர்களை கடந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. எனினும் மே மாத இறுதியில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே வந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் தங்கள் கையிருப்பு கச்சா எண்ணெயை சந்தைக்கு கொண்டுவந்தது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், அமெரிக்காவில் டீசல் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு ஹவுதி அமைப்பும் சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் உயர்தர பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெயின் விலை 109.87 டாலராக உயர்ந்து, கடந்த 5 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

US Federal Bank

கச்சா எண்ணையின் இந்த தொடர் விலை உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்க, அமெரிக்காவின் மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தினால் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் அமெரிக்க டாலர் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், தங்கள் முதலீட்டை அதில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவே கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக பிரபல அமெரிக்க இதழான தி வால் ஸ்டிரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு சிறிது நாட்களுக்கு தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.