மாலி தங்கச் சுரங்கம்
மாலி தங்கச் சுரங்கம் ட்விட்டர்
உலகம்

மாலி: விண்ணை அதிரவைத்த சத்தம்..மண்ணில் புதைந்த தங்கச் சுரங்கம்! 73 பேர் பலி! மேலும் 130 பேர் தவிப்பு

Prakash J

ஆப்பிரிக்க நாடான மாலியில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியின் கங்காபா மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்தச் சுரங்கம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி, திடீரென இடிந்து விழுந்தது. இந்த திடீர் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது பெரிய சத்தம் கேட்டதாகவும், பூமியே அதிர்ந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகவல் கிடைத்த உடன் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் தற்போதுவரை 73 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்தோரின் உடல்கள் மண்ணில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மாலியில் நிறைய தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இத்தகைய விபத்துகள் ஏற்படுவது அங்கு, வாடிக்கையாகிவிட்டது. ஏனெனில் இதுபோன்ற சுரங்க பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.