உலகின் மிக அரிதான நீலவைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம், மே 14 அன்று ஜெனீவாவில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்த வைரக்கல், நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது முன்னர் இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த சுரங்கங்கள் கோஹினூர் மற்றும் ஹோப் வைரங்கள் உட்பட உலகின் மிகவும் பிரபலமான வைரங்களில் சிலவற்றை உற்பத்தி செய்ததாக அறியப்படுகிறது.
23.24 காரட் கொண்ட துடிப்பான நீல வைரம், புகழ்பெற்ற பாரிசிய நகை வியாபாரி JAR ஆல் நவீன மோதிரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டியின் மதிப்பீடுகளின்படி, இந்த அற்புதமான வைரக்கல் 35-50 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.300 - 430 கோடி) விலைக்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கோல்கொண்டா நீல வைரம் ஒரு காலத்தில் இந்தூரின் மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் IIஇன் சேகரிப்பில் இருந்தது. 1923ஆம் ஆண்டில், பிரெஞ்சு நகை வியாபாரி சௌமெட் அதை மகாராஜாவுக்கு ஒரு வளையலில் பதித்தார். 1930களில், மகாராஜாவின் அதிகாரப்பூர்வ நகை வியாபாரியான மௌபௌசினால், இது ஒரு பிரமாண்டமான நெக்லஸாக மாற்றப்பட்டது. அந்தக் காலத்தின் கவர்ச்சியையும் கலாசார இணைவையும் படம்பிடித்து, பிரெஞ்சு கலைஞர் பெர்னார்ட் பௌடெட் டி மோன்வெல் வரைந்த உருவப்படத்தில் இந்த நெக்லஸ் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 1947ஆம் ஆண்டு நகை வியாபாரி ஹாரி வின்ஸ்டன் அதை வாங்கியபோது, கோல்கொண்டா நீல வைரம் அமெரிக்காவிற்கு வந்தது. இப்போது, இந்த அசாதாரண வைரக் கல் ஜெனீவாவில் நடைபெறும் உலகளாவிய கிறிஸ்டியின் மகத்தான நகைகள் ஏலத்தின் ஏலம் விடப்பட இருக்கிறது.
இதுகுறித்து கிறிஸ்டியின் சர்வதேச நகைத் தலைவர் ராகுல் கடாகியா, “உன்னத ரத்தினங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தைக்கு வருகின்றன. அதன் 259 ஆண்டுகால வரலாற்றில், கிறிஸ்டிஸ் உலகின் மிக முக்கியமான கோல்கொண்டா வைரங்களில் சிலவற்றை வழங்கும் பெருமையைப் பெற்றுள்ளது. அவற்றில் ஆர்ச்டியூக் ஜோசப், பிரின்சி மற்றும் விட்டல்ஸ்பாக் ஆகியவை அடங்கும். அதன் அரச பாரம்பரியம், அசாதாரண நிறம் மற்றும் விதிவிலக்கான அளவு ஆகியவற்றால், 'கோல்கொண்டா நீலம்' உண்மையிலேயே உலகின் அரிதான நீல வைரங்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.