உலகம்

’பசி தீவிரமான நாடுகள்’ - ''குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்

கலிலுல்லா

உலக பட்டினி அறிக்கையின்படி மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. 94வது இடத்திலிருந்த இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(The Global Hunger Index)வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இந்த அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.

இந்தியாவுக்கு பிறகு 15 நாடுகள் மட்டுமே மோசமான நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை முறையே, பப்புவா நியூ கினி 102வது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் 103வது இடத்திலும், நைஜீரியா 104வது இடத்திலும், காங்கோ 105வது இடத்திலும் உள்ளது. இதில் 116வது இடமான கடைசி இடத்தில் பட்டினியில் பின்தங்கிய நாடாக சோமாலியா இருக்கிறது.

அண்டைநாடுகளான பாகிஸ்தான் (92), நேபாளம் (76), பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியிருக்கிறது. உலகளாவிய பசி குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(GHI) தற்போதைய கணிப்பின்படி, 47 நாடுகள் - 2030 க்குள் குறைந்தபட்ச பசியைக் கூட பூர்த்தி செய்ய தவறிவிடும் என்று தெரிவித்துள்ளது.