மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. இது, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தவிர, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தால் எண்ணெய் வர்த்தகம், பொருளாதாரப் பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புவை மோசமாக விமர்சித்து, ஈரான் மிகப்பெரிய விளம்பரப் பலகையைப் பொது இடத்தில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தன்னைக் கொல்ல முயற்சி செய்யக்கூடும் என்று ட்ரம்ப் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த விளம்பரப் பலகை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிபரைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம் குறித்த புதிய உளவுத் தகவலை இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த சமீபத்திய 'ட்ரம்ப்பைக் கொல்லுங்கள்' சுவரோவியம் வரையப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ஈரான் தனது முக்கிய இடமான எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள அந்த விளம்பரத்தில், திறந்த கருப்புச் சவப்பெட்டியில் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற படம் உள்ளது. அதில் அவர், கண்கள் மூடிய நிலையிலும், கலைந்த தலைமுடியுடனும் படுத்திருப்பதைக் காணமுடிகிறது. மேலும்,,'நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. விளம்பரப் பலகையின் கீழே, ’மினாபின் குழந்தைகளின் நினைவாக’ என்றும் எழுதப்பட்டுள்ளது. இது, மோதலின் முதல் நாளில் ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிக்கிறது.
அந்தத் தாக்குதல்களில் 120 சிறுமிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அலி கமேனியின் இறுதிச்சடங்குகளின்போது, 'அமெரிக்காவுக்கு மரணம்' என்ற முழக்கங்களும், 'ட்ரம்ப்பைக் கொல்' என்ற பிரம்மாண்டமான சுவரொட்டிகளும் ஈரானிய நகரங்கள் முழுதும் நிரம்பிக் கிடந்தன.