கானா நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசி எபோ நோவா, உலகம் டிசம்பர் 25ஆம் தேதியிலிருந்து அழியப்போகிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், கடவுளிடம் பிரார்த்தனை செய்ததன் மூலம் உலக அழிவை தள்ளிப்போட்டதாகவும், மழை மற்றும் வெள்ளம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லப்பட்ட கதையை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தீர்க்கதரிசிகள் என சொல்லப்படும் நபர்கள், ஒவ்வொரு முறையும் உலகம் அழியப்போகிறது என்ற கதையை கட்டவிழ்த்துள்ளனர்.
அதேபோல தான் கானா நாட்டைச்சேர்ந்த எபோ நோவா என்ற நபரும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளான டிசம்பர் 25ஆம் தேதியான இன்றுமுதல் உலகம் அழியும் என தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பினார்.
கிழிந்த சாக்குப்பைகளை உடையாக அணிந்திருக்கும் இந்த நபர், தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று அறிவித்துக்கொண்டுள்ளார். இவர் சொன்ன சில விசயங்கள் அப்படியே நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கத்தரிசி டிசம்பர் 25ஆம் தேதியான இன்றுமுதல் அதிகப்படியான மழை மற்றும் பெருவெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது என்றும், அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மக்களை காக்கும் பேழைகளை தான் கட்டிவருவதாக தெரிவித்திருக்கும் அந்நபர், இந்த பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நான் தொடர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துவருகிறேன், அதனால் கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். இதோடு நிறுத்து என அவர் சொல்லும்வரை பேழைகளை கட்டி வருகிறேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தசூழலில் அவருக்கு பேழைகளை கட்ட அவரை பின் தொடர்பவர்கள் தொடர்ந்து அவருக்கு பணம் அனுப்பி வருகின்றனர் என சொல்லப்படுகிறது.
உலகம் அழிவதில் இருந்து தப்பிக்க தீர்க்கத்தரிசி நோவா கட்டிவரும் 8 பேழைகளில் தங்களுடைய இடத்தை பிடிக்க பல மக்கள் அவர் இருப்பிடத்தை தேடி பயணம் செய்துவருவதாக செய்தி ஒன்று வலம்வருகிறது.
அதேநேரத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, உலகம் அழிவதை முன்னிட்டு தீக்கத்தரிசி எபோ நோவா கடவுளிடம் தொடர்ந்து பிராத்தனை செய்ததாகவும், அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கடவுள், தற்போது உலகம் அழிவதை தள்ளிப்போட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். அதன்படி மழை மற்றும் வெள்ளம் தற்போதைக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.