கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜெர்மனியில், இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 36, 075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் நேற்று மட்டும் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை 59 ,138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,756 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 ,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஜெர்மனியில், இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலோ மெர்கல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உணவகங்களில் அமர்ந்து உண்ணும் நடைமுறை தடை செய்யப்படுவதாகவும் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்பட வேண்டுமெனவும் ஏஞ்சலோ மெர்கல் உத்தரவிட்டுள்ளார்.
பொது இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூட அடுத்த இரு வாரங்களுக்கு தடைவிதிப்பதாக அவர் கூறினார். இதனிடையே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, பிரதமர் ஏஞ்சலோ மெர்கல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால், அலுவல் பணிகளை அவர் வீட்டிலிருந்தே மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது