ஜெர்மன் இளைஞர்
ஜெர்மன் இளைஞர் ட்விட்டர்
உலகம்

ஓடும் ரயிலிலேயே A to Z வாழ்க்கை.. ஆண்டிற்கு ரூ.8,90,000 செலவு.. ஜெர்மன் இளைஞரின் விநோத ஆசை!

Prakash J

ஜெர்மனியின் ஸ்க்லெஸ்விக்-ஹோல்ஸ்டீன் (Schleswig-Holstein) மாகாணத்தில் உள்ள ஃபோக்பெக் பகுதியைச் சேர்ந்தவர், லாஸ்ஸே ஸ்டோலி (Lasse Stolley). இவருக்கு 16 வயதானபோது, தன் விபரீத ஆசை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் ஆசையைப் பெற்றோர் தடுக்க முயன்றனர். ஆனால், அதை எல்லாம் தூக்கி எறிந்த ஸ்டோலி, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீட்டைவிட்டேப் புறப்பட்டுள்ளார். ஜெர்மனியில் ஓடும் ரயில்களிலேயே வாழ்வதுதான் அவரது ஆசையாக இருந்துள்ளது. அந்த ஆசையில்தான் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். ஆகஸ்ட் 8, 2022 தொடங்கிய அவரது பயணம் இன்றுவரை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் பயணத்திலேயே அவரது வேலை, உணவு, உறக்கம் என அடங்கியிருப்பதுதான் ஹைலைட். ஆன்லைனில் புரோகிராமராக பணியாற்றும் ஸ்டோலிக்கு, நீச்சல் குளங்களில் குளிப்பதும் மழையில் நனைவதும் ஸ்பெஷலாக பிடிக்கும் விஷயங்களாக உள்ளன. இதற்காக அவர் வருடாந்திர ரயில் பயணச்சீட்டில், முதல் வகுப்பில் பயணம் செய்வதுடன், ஆண்டொன்றிற்கு 8,500 (இந்திய மதிப்பில் 8,95,922 ரூபாய்) பவுண்டுகளை செலவு செய்கிறார்.

இதுகுறித்து அவர், ”நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு டிஜிட்டல் நாடோடியாக ரயிலில் வாழ்ந்து வருகிறேன். இரவில் நகரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ICE) ரயிலில் தினம் தூங்குகிறேன். பகலில் ஓர் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன். ஒரு புரோகிராமராக பணிபுரியும் நான், பல பயணிகளால் சூழப்பட்டப்படியே வேலை செய்கிறேன். நான் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு, அதாவது ஒருநாளைக்கு 600 மைல் தூரம் பயணம் செய்கிறேன். இதன்மூலம் நான் ஜெர்மனி முழுவதையும் கண்டு வருகிறேன். ஆரம்பகாலங்களில் மிகவும் கடினமாக இருந்தது. தற்போது இது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

எனினும், எனக்கு ஒரே ஒரு பயம் உள்ளது. இரவு நேரப் பயணத்தின்போது, உடைமைகள் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ரயில்களில் திருட்டு, தாக்குதல் மற்றும் அடாவடி செய்யும் பயணிகளை தடுக்க போதுமான பாதுகாவலர்கள் இல்லை” என்று சொல்லும் ஸ்டோலி, வருங்காலத்தில், ஜெர்மன் ரயில்வேயில் ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருக்கிறாராம்.