அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஜார்ஜியா. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலைக் கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா இம்மாகாணத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஏப்ரல் 2023இல் ஜார்ஜியா இந்து வெறுப்பு மற்றும் இந்து எதிர்ப்பு மதவெறியைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியபோது அமைக்கப்பட்ட அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தத் தீர்மானம், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட உலகின் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதத்தை அங்கீகரித்தது.
இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர். “சமீபத்திய இந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இதுதொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்” என்றும் சபையில் தெரிவித்தனர். உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் இந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும். தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை. இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை ஜார்ஜியா பெறுகிறது. இதனை இந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
2023-2024 பியூ ஆராய்ச்சி மைய மத நிலப்பரப்பு ஆய்வின்படி, அமெரிக்காவில் சுமார் 2.5 மில்லியன் இந்துக்கள் உள்ளனர் - இது தேசிய மக்கள்தொகையில் சுமார் 0.9 சதவீதத்தை உள்ளடக்கியது. இதில்தான் ஜார்ஜியாவில் 40 ஆயிரம் இந்துக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.