உலகம்

ஜார்ஜியா: அரசு ஆதரவாளர்களால் தாக்கி ஒளிப்பதிவாளர் கொலை - நீதி கேட்கும் செய்தியாளர்கள்!

Veeramani

ஜார்ஜியா நாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற ஒளிப்பதிவாளர் அரசு ஆதரவாளர்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டில் கடந்த 5ஆம் தேதிதன்பாலின சேர்க்கைக்கு எதிரானவர்கள் பேரணி நடத்தினர். அந்த பேரணி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் திடீரென தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த PIRVELI தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அலெக்சாண்டர் லஷ்கராவா சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த பேரணியை பயன்படுத்தி ஆட்சியை விமர்சிக்கும் ஊடகங்களை குறிவைத்து, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக ஜார்ஜியா செய்தியாளர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது.

அலேக்சாண்டர் லஷ்கராவின் கொலைக்கு நீதி கேட்டு சக செய்தியாளர்கள் அரசின் செய்தியாளர் சந்திப்பை இடையூறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் சந்திப்பு தொடங்க இருந்த போது அதனை இடையூறு செய்து , கொல்லப்பட்ட லஷ்கராவாவின் படத்தை கையில் ஏந்தி செய்தியாளர்கள் அனைவரும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதிபரே இந்த வன்முறையை தூண்டிவிட்டதாகவும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே அலெக்சாண்டர் லஷ்கராவுக்கு நீதி கேட்டு 4 தொலைக்காட்சிகள் தங்களது ஒரு நாள் ஒளிபரப்பினை நிறுத்திவைத்துள்ளன.