israel gaza
israel gaza pt web
உலகம்

உயிரிழந்த தன் பேரனை கைகளில் ஏந்தி கண்ணீர் சிந்திய டாக்டர்! உருக வைக்கும் காட்சி..தொடரும் காஸா துயரம்

Angeshwar G

ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

israel and hamas war

மருத்துவமனை கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள் என இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றன. இந்த தாக்குதலால் காஸா நகரமே சிதைந்து வரும் சூழலில், தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு, பகல் பாராமல் நடந்து வருகிறது.

காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மக்கள் தஞ்சமடைந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் படையினர் மற்றும் பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம் தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் சூழலில் எல்லையில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Gaza | IsraelPalestineConflict | Israel | Palestine

நள்ளிரவு நேரத்திலும் தாக்குதல் தொடர்வதால், காஸா மற்றும் இஸ்ரேலிய நகரங்களில் எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் இல்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அதே சமயம் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காஸா நகர மக்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் 3ஆயிரத்து 750க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும் ஹமாஸ் தாக்குதலில் 1400க்கும் அதிகமான இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இருதரப்பு போரால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என வயதுவரம்பின்றி பலரும் பாதிக்கப்பட்டு தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவர் பச்சிளம் குழந்தையான தனது பேரனின் சடலத்தை கைகளில் ஏந்தி கண்ணீர் சிந்தும் காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது. இது குறித்தான வீடியோ வெளியான நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.