இஸ்ரேல்
இஸ்ரேல்  ட்விட்டர்
உலகம்

பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த இஸ்ரேல் மக்கள்! பின்னணி காரணம் இதுதான்!

Prakash J

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 30 நாட்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்

போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் 7ஆம் தொடங்கிய இப்போரில், இதுவரை 3,900 குழந்தைகள் உட்பட 9,488 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக, ‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்! Timed Out - விதி என்ன?

இந்த நிலையில் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கண்டித்து தலைநகர் டெல் அவிவ்விலும், ஜெருசலேமில் அவரது வீட்டிற்கு முன்பும் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ’இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும் 200க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளால் பிடித்துச் செல்லப்பட்டதற்கும் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், ஹமாஸ், பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

நெதன்யாகு

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்ரேல் நாட்டின் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், 64% பேர் போருக்குப் பிறகு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலியர்களில் 76% பேர் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாக அது தெரிவித்துள்ளது. தவிர, இஸ்ரேலியர்களில் 44% பேர் ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகு மீது குற்றம்சாட்டியுள்ளனர், 33% பேர் ராணுவத் தளபதி மற்றும் மூத்த IDF அதிகாரிகள் மீதும், 5% பேர் பாதுகாப்பு அமைச்சரையும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: "நான் வேதனைப்படுகிறேன்; பயமாக இருக்கிறது" - Deep fake வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு