இஸ்ரேல் மற்றும் காஸாவிற்கிடையேயான போரில் இதுவரை 65,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போர் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து, பன்நெடுங்காலமாக வாழ்ந்துவந்த காஸாவிலிருந்து வெளியேற பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் கெடு விதித்தது. சொந்த பூமியைவிட்டு அவர்கள் வெளியே செல்வதற்காக சலா அல்-தின் சாலையையும் இஸ்ரேல் திறந்துவிட்டுள்ளது.
தெற்கு நோக்கி மக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிலர் குழந்தைகளையும், குடும்பத்தையும் காக்க தெற்கு காஸாவுக்கு சென்றுவருகின்றனர். பலர் அங்கிருந்து சென்றால், மீண்டும் வடக்கு காஸாவிற்கு வர முடியுமா? என்ற குழப்பத்துடன், சொந்த மண்ணில் இருந்து வேருடன் பிடிங்கி மற்றொரு இடத்தில் செடியை நடுவதுபோல, தெற்கு காஸாவுக்கு தங்களை விரட்ட இஸ்ரேல் முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இடம்பெயரும் மக்களுக்கு பணம் இல்லாதநிலை பெரும் வேதனையாக மாறியுள்ளது.
வசதி உள்ளவர்கள் வாடகை வாகனங்களில் பொருட்களை எடுத்துச்செல்கின்றனர். ஆனால் ஏழைகள் வாகனங்களுக்கு கொடுக்க வாடகைப்பணம் இல்லாததால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டர் செல்ல 65 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்பதால் அதை பலராலும் தர இயலவில்லை. இன்னொருபுறம் இஸ்ரேல் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் துவம்சம் செய்துவரும் நிலையில் ஏழை மக்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.