காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதேநேரத்தில், காஸாவில் மறுகட்டமைப்புக்கு உறுதியளிக்கும் இந்தப் பரிந்துரை, பாலஸ்தீன அரசமைப்பிற்கு எந்தப் பாதையையும் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அமைதித் திட்ட பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஹமாஸும் சில கோரிக்கைகளை வைப்பதற்கு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காஸா நகரில் எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, தெற்கு காஸாவில் வசிப்பவர்கள் வடக்கு நோக்கி நகர்வதற்கான கடைசி பாதையை மூடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், வடக்கில் வசிப்பவர்கள் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்பிக்க கடலோரப் பாதையில் தெற்கு நோக்கி நகர முடியும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து மக்கள் கையில் கிடைத்த உடைமைகளுடன் தெற்குப் பகுதியை நோக்கி விரைகின்றனர். தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத கூடாரங்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே, காஸாவை நோக்கி மனிதாபிமானஅடிப்படையில் நிவாரணப் பொருட்களுடன் வரும் படகுகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது.பல்வேறு நாடுகளில் இருந்து 50 படகுகளில் 500 தன்னார்வலர்கள் பொருட்களுடன் காஸா நோக்கிவந்தனர். பிரபல சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா உள்ளிட்டோரும் இப்படகுகளில் வந்தனர். ஆனால், இவர்களை இஸ்ரேல் படைகள் கடலில் இடைமறித்து தடுத்து நிறுத்தி திருப்பிவிட்டன. 13 படகுகள் தடுக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற படகுகள் இஸ்ரேலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச கடல் பகுதியில் வந்த படகுகளை தடுத்தது விதிமீறல் என துருக்கி தெரிவித்துள்ளது. பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிப்பதைக்கூட தடுக்கும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கியில் போராட்டங்கள் நடந்தன.
மறுபுறம், காஸாவுக்குச் செல்லும் நிவாரணக் கப்பலால் எந்தப் பயனும் இல்லை என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி விமர்சித்துள்ளார். காஸாவை நோக்கி பயணிக்கும் SUMUDFLOTILLA என்ற நிவாரணக் கப்பலை, இஸ்ரேல் கடற்படை சுற்றி வளைத்துள்ளது. இந்தக் கப்பலில் பயணிக்கும் 22 இத்தாலியர்களையும் இஸ்ரேல் பிடித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ”22 இத்தாலியர்களும் பத்திரமாக நாடு திரும்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார். ”இருந்தபோதிலும் அவர்களது பயணம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பலனையும் கொண்டுவராது” எனவும் மெலோனி கூறியுள்ளார்.