உலகம்

காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ. தான் - ராகுல்காந்தி

rajakannan

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த முக்கியமான தலைவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தவர்கள் தான் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, நியூயார்க் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வெளிநாடுவாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’காங்கிரஸ் இயக்கமும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் இயக்கமாகவே பிறந்தது. மகாத்மா காந்தி ஒரு வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தவர். நேரு இங்கிலாந்தில் இருந்து வந்தவர். அம்பேத்கர், ஆசாத், பட்டேல் உள்ளிட்டோரும் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருந்தவர்கள். இதுபோன்ற ஆயிரக்கணக்கான வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவை பொறுத்தவரை வெள்ளை புரட்சியின் தந்தை வெர்கீஸ் குரியன் வெளிநாடுவாழ் இந்தியர் தான். அவர் அமெரிக்காவில் இருந்து வந்து, இந்தியாவை மாற்றியவர். வெளிநாடுகளில் தங்கிவிட்ட காரணமாக மட்டுமே இந்தியாவிற்கு அவர்கள் எந்தவொரு பங்களிப்பும் செலுத்தவில்லை என்று கூறமுடியாது’ என்றார்.