உலகம்

பால்வழி அண்டத்தை விட பெரிய கேலக்ஸியை கச்சிதமாக படம்பிடித்த ஜேம்ஸ் வெப்!

ச. முத்துகிருஷ்ணன்

நமது பால்வழி அண்டத்தை விட மிகப்பெரிய கேலக்ஸி ஒன்றை முன்னெப்போதும் இல்லாதவாறு மிகத் தெளிவாகப் படம்பிடித்து அசத்தியுள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்மீன் மண்டலத்தின் மிக விரிவான படங்களை கச்சிதமாக மீண்டும் ஒருமுறை படம்பிடித்துள்ளது. இம்முறை நமது பால்வழி அண்டத்தை விட மிகப்பெரிய கேலக்ஸி ஒன்றை படம் பிடித்துள்ளது. பூமியிலிருந்து 29 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும், சுமார் 66 ஆயிரம் ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட IC 5332 என்று குறிப்பிடப்படும் அந்த கேலக்ஸியில் இருக்கும் சுழல் விண்மீனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகத் துல்லியமாக படம்பிடித்து அசத்தியிருக்கிறது ஜேம்ஸ் வெப்.

தன்னிடம் இருக்கும் மத்திய அகச் சிவப்பு கருவியைப் (MIRI) பயன்படுத்தி இந்த சுழல் விண்மீனை படம்பிடித்துள்ளது ஜேம்ஸ் வெப். ஹப்புள் தொலைநோக்கி சுழல் கரங்களைப் பிரிப்பது போல காட்டினாலும், ஜேம்ஸ் வெப் எடுத்திருக்கும் புகைப்படம் சுழல் கரங்களின் வடிவத்தை எதிரொலிக்கும் தொடர்ச்சியான சிக்கலான அமைப்பையும் சேர்த்து படம்பிடித்து அசத்தியுள்ளது. விண்மீன் மண்டலத்தில் தூசி நிறைந்த பகுதிகள் இருப்பதால் இந்த வேறுபாடு இருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்தனர்.