g20, putin
g20, putin pt web
உலகம்

”ஜி20 உச்சி மாநாட்டில் புதின் கலந்து கொள்ளும் எந்த திட்டமும் இல்லை”- ரஷ்யா தரப்பில் சொன்ன அதே காரணம்

Angeshwar G

இந்தாண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஜி20யின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு ஜி20யின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்வது குறித்து எந்த திட்டமும் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் ட்ரிமிட்டி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் நேரில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் ரஷ்ய அதிபர் புதின் போர்க்குற்றம் செய்ததாக கூறி அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், புதின் வெளிநாடு செல்கையில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அதன் காரணமாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் புதின் எவ்வாறு பங்கேற்பார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.