உலகம்

பைடன் உயிருக்கு அச்சுறுத்தல் முதல் புடின் பதிலடி வரை: லேட்டஸ்ட் உலக செய்திகளின் தொகுப்பு!

EllusamyKarthik

>அமெரிக்க அதிபர் பைடன் உயிருக்கு அச்சுறுத்தல்!

அமெரிக்க நாட்டின் அதிபர் பைடனுக்கு தனித்தனியாக கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலையை வெட்ட உள்ளதாகவும், குண்டு வைத்து கொல்ல உள்ளதாகவும் 79 வயதான பைடனுக்கு கொலை மிரட்டல் வந்திருந்தது.

>கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்தது டென்மார்க்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது டென்மார்க். ஐரோப்பிய கண்டத்தில் இந்த நடவடிக்கையை அமலுக்கு கொண்டு வந்துள்ள முதல் நாடாகியுள்ளது டென்மார்க். அந்த நாட்டில் முகக்கவசம் கூட அணிய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>கிம் ஜாங்-உன் குறித்த புதிய ஆவணப்படம்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் குறித்த புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது அந்த நாட்டின் அரசு ஊடகம். ஆண்டுதோறும் தங்கள் நாட்டு அதிபரின் கடந்த ஆண்டு செயல்பாட்டை தொகுத்து ஆவணப்படமாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021-இல் கிம் ஜாங்-உன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பணிகள் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

>பிரிட்டன்:

மாஸ்க் அணியாமல் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை செயலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு நடைமுறையை மீறி பார்ட்டியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதற்காக வருத்தம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் பங்கேற்ற அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் ட்ரஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

>இலங்கையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கு தூதகரம் உதவி

தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்கள் எல்லைத் தாண்டி தங்கள் நாட்டின் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கையில் இயங்கி வரும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

>ஈரான் அணுசக்தி தளம் நிறுத்தம்

ஜூன் மாத தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தனது அணுசக்தி தளங்களில் ஒன்றைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக தகவல் அளித்துள்ளது சர்வதேச அணுசக்தி நிறுவனம்.

>அமெரிக்கா - கொள்ளையன் என நினைத்து போலீஸ் மீதே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கொள்ளையனை துரத்தி சென்ற போது மேலதிகாரியை கொள்ளையன் என நினைத்து போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் அந்த மேலதிகாரி உயிரிழந்துள்ளார்.

>நெதர்லாந்து - கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல்

நெதர்லாந்து நாட்டின் பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.6 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட உள்ளன.

>நாங்கள் பின்வாங்கப் போவதில்லை: ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக படையெடுக்க உள்ளதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் எல்லையில் ரஷ்யா 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை குவித்துள்ளது.