செய்தியாளர் - M. மீரா
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக சேர்ந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட உச்சத்தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4 ஆம் தேதி துவங்கி, ஊர்வலமாகச் சென்று மஷ்ஹத் (Mashhad) நகரில் ஜூலை 9 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கின்போது டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரது மரணமே பதிலடி என்று ஈரான் மக்கள் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் பேனர்களையும் வைத்திருந்தனர்.
தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, தற்போதைய உச்ச தலைவரான மொஜ்தபா காமேனி, தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையை ஈரானியர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் இரண்டு போர்களிலும் உயிரிழந்த அனைத்து தியாகிகளின் புனிதமான இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என்றும் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எங்கள் தேசத்தின் விருப்பமாகும்; இது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிவைக்கப்பட வேண்டிய நபர்களின் பட்டியலை ஈரான் தயாரித்துள்ளதாகவும் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் கூறினார்.
இந்நிலையில் ஈரானில் ஒரு பழமைவாத நாளிதழ், அந்நாட்டின் உச்சத்தலைவர் அலி காமேனியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குறிவைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது;
ஈரானின் தலைநகரில் உள்ள அதிகாரிகளால் வெளியிடப்படும் 'ஹம்ஷஹ்ரி' (Hamshahri) செய்தித்தாள், மொஜ்தபாவின் (Mojtaba) அறிக்கையுடன் 13 வெளிநாட்டுத் தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளடக்கிய ஒரு பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தித்தாள் வெளியிட்ட பட்டியல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்ஸெத், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரும் உள்ளனர்.
போரின்போது, ஈரான் நாட்டின் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியதாகவும், அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் ஐரோப்பிய நாடுகளை ஈரான் குற்றம் சாட்டியுள்ளது .
பட்டியலில் இருப்பவர்களை குற்றவாளிகள் என்று குறிப்பிட்டிருக்கிறது . இந்த செய்தித்தாள் மேலும் இவர்கள் தங்கள் படுக்கையில் அமைதியான முறையில் மரணமடைய வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளாமலே தங்கள் கல்லறையைச் சென்றடைவார்கள் என்று இந்த செய்தித்தாள் கூறியுள்ளது.