உலகம்

சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்

சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்

webteam

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லி நகரங்களுக்கு செல்கிறார்.

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.05 மணி அளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

மாலை 3.30 மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்படும் ட்ரம்ப், 4.45 மணிக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்றடைகிறார். அங்கு தாஜ்மஹாலை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாஜ்மஹாலை கண்டுகளித்த பின் அங்கிருந்து புறப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இரவு 7.30 மணிக்கு டெ‌ல்லி சென்றடைகிறார்.

அங்கு தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கும் அதிபருக்கு, நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.