உலகம்

உருவ ஒற்றுமையால் சிறை... 17 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை

webteam

அமெரிக்காவில் திருட்டில் ஈடுபட்டவரைப் போல உருவ ஒற்றுமை கொண்டவர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

கான்சாஸ் நகரில் உள்ள ரோலண்ட் பார்க் எனும் வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாக ரிச்சர்ட் அந்தோணி ஜோன்ஸ் என்பவருக்கு 19 ஆண்டுகள் சிறைதண்டனை கடந்த 1999ல் விதிக்கப்பட்டது. திருட்டில் தாம் ஈடுபடவில்லை என்றும், சம்பவம் நடந்தபோது தனது காதலியுடன் வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும் கூறிய ஜோன்ஸின் வாதம் நீதிமன்றத்தில் எடுபடாமல் போகவே, அவர் சிறைதண்டனை உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளும் ஜோன்ஸுக்கு எதிராகவே அமைந்தன. தண்டனை பெற்று சிறை சென்ற பின்னர், ஜோன்ஸைப் போலவே உருவ ஒற்றுமைகொண்ட நபர் ஒருவர் இருப்பது சிறைவாசிகள் மூலமாக அவருக்கு தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தனது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தியவருக்கு சமீபத்தில் விடுதலை கிடைத்துள்ளது. ஜோன்ஸைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் திருட்டில் ஈடுபட்டிருந்ததும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரிக்கி என்ற பெயருடைய அந்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரிடம் நடைபெற்ற விசாரணையை அடுத்து ஜோன்ஸை விடுவித்து ஜான்சன் கவுண்டி நீதிமன்ற நீதிபதி கெவின் உத்தரவிட்டார். உருவ ஒற்றுமை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஜோன்ஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.