உலகம்

ரூ.750 செலுத்தினால் நாடெங்கும் இலவச பயணம்! அசத்தும் ஜெர்மனி!

ச. முத்துகிருஷ்ணன்

ஜெர்மனியில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அந்நாட்டு அரசு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது. எரிபொருள் கட்டண உயர்வை சமாளிக்கும் வகையில் மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு ஏதுவாக நிலையான பொதுப்போக்குவரத்து கட்டணமாக மாதத்திற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு மாதத்திற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால் நாடெங்கும் பேருந்து, ரயில்களில் இலவசமாக பயணிக்க முடியும். ஆகஸ்ட் இறுதி வரை மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

ஜெர்மனியின் பாராளுமன்றத்தின் மேல்சபை வெள்ளிக்கிழமையன்று இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு, அவர்கள் கட்டிய அதிக தொகையை திருப்பிக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 2.5 பில்லியன் யூரோ செலவு ஏற்படுமென ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ஆகுமாம்!