உலகம்

மசூத் அசார் சொத்துக்களை முடக்கியது பிரான்ஸ்

webteam

பிரான்ஸ் நாட்டில் உள்ள மசூத் அசாருக்கு சொந்தமான சொத்துகளை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4ஆவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்‌ளது. இதனையடுத்து சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை பிரான்ஸ் தடைசெய்துள்ளது. அத்துடன் பிரான்சிலுள்ள அசாரின் சொத்துக்களும் முடக்கப்படுள்ளன. இதன்மூலம் மசூத் அசார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரான்ஸ் நாட்டிற்குள் பயணம் செய்ய முடியாது. அத்துடன் அசார் பிரான்ஸ் நாட்டில் எவ்வித நிதி பரிவர்த்தனையையும் செய்யமுடியாது. இந்த முடிவை பிரான்ஸ் அரசு அதன் அரசிதழில் அரசாணையாக வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு செய்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், “பிரான்ஸ் நாடு மசூத் அசார் விவகாரத்தை மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் எழுப்பும். அத்துடன் அசாரை ஐரோப்பிய நாடுகளின் தடை செய்யப்பட்ட நபர்கள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல், பாகிஸ்தானில் நுழைந்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலுக்கும் அந்நாடு ஆதரவாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்போம் என்று பிரான்ஸ் தெரிவித்திருந்தது. அந்த வகையில் புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியே பிரான்ஸ் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.