பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு
அமலுக்கு வந்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பிரான்சிலும் ஒல்லியான மாடல்
அழகிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மாடல் அழகிகள்
மாடலிங் செய்வதற்கு மருத்துவர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும்.
குறிப்பாக மாடலிங் செய்ய விரும்புகிறவர்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ. என்று
அழைக்கப்படுகிற உடல் நிறை குறியீட்டு) இருக்கிறார்களா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து
சான்றிதழ் தர வேண்டும்.
முதலில் இந்த சட்டத்தின் வரைவுக்கு மாடல் அழகிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில்
ஈடுபட்டனர். பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போதைய சட்ட வடிவத்துக்கு
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறி ஒல்லியான மாடல் அழகிகளை மாடலிங் செய்வதற்கு யாரேனும்
பயன்படுத்தினால் அவர்களுக்கு 82 ஆயிரம் டாலர் வரை அபராதமும், 6 மாதங்கள் வரை
சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.