தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா ஊழல் வழக்கில் ஏற்கனவே ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை பெற்றிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவமனையிலேயே ஆறு மாதத்தை கழித்திருக்கிறார். இதனால், மீண்டும் தக்சின் சினவத்ரா-வுக்கு ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமராக 2001 முதல் 2006 வரை தக்சின் சினவத்ரா பதவிவகித்தார். அவர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், உலகளாவிய சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கைகள் தாய்லாந்தின் கிராமப்புற மற்றும் தொழிலாள வர்க்க மக்களிடையே அவருக்கு குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுக்கொடுத்தன. ஆனாலும், அவரது ஆட்சியில் பல ஊழல் புகார்கள் எழுந்தன. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தாக்சின் வெளிநாட்டில் இருந்தபோது தாய்லாந்தில் நடந்த ராணுவ புரட்சியின் காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றார். பின்னர், 2008 ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர், அவரின் மீதுள்ள ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள முயன்றார். ஆனால், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் நடந்தன. இதனால், தக்சின் சினவத்ரா மீண்டும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றார். வெளிநாடுகளில் இருந்தாலும் அவரது கூட்டணிக் கட்சிகளின் வாயிலாக அந்நாட்டு அரசியலில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய அவர் உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவரது முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகளின் அடிப்படையில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட தக்சின் சினவத்ரா, அன்றைய தினமே உடல்நிலை சரியில்லை எனக்கூறி 6 மாதங்களை மருத்துவமனையில் கழித்து இருக்கிறார். இதனையடுத்து தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சிறைதண்டனையை ஓராண்டாக குறைத்து உத்தரவிட்டிருந்தார்.
மருத்துவமனையில் ஆறு மாதங்கள் தங்கி, அதன் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டு பாங்காக்கில் உள்ள இல்லத்துக்குச் சென்றார். இதனால், சிறைதண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை என தாய்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதற்கு தீர்பளித்துள்ள உச்சநீதிமன்றம் 6 மாதங்கள் மருத்துவமனையில் இருக்கும் அளவிற்கு தக்சின் சினவத்ரா உடல்நிலை மோசமாக இல்லை எனவும், இது சிறை விதிமீறல்; சிறை தண்டனை ஒழுங்காக நிறவேற்றப்படவில்லை என்பதையே காட்டுகிறது எனக்கூறியது. தொடர்ந்து தக்சின் சினவத்ரா ஓராண்டு சிறை தண்டனையை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
சமீபத்தில், 2024 ஆகஸ்ட் மாதம் முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரை தாய்லந்து பிரதமராக பதவிவகித்து வந்த இவரது மகள் பேடோங்டார்ன் சினவத்ரா நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி தாய்லாந்து நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.