அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற பேரணியில், அந்நாட்டு கொடி மீது காவிக்கொடி ஏற்றிய புகாரில்தான் கிருஷ்ண தாஸ்மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு ஜாமீன் தரப்படாத நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எனினும், அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகததால், ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தாஸுக்கு ஆதரவாக வாதாடுவதாக இருந்த வழக்கறிஞரும் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த மாதமும், சின்மோய் கிருஷ்ணதாஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் உதவி அரசு வக்கீல் என்பதும், அவர் சின்மோய் தாஸுக்கு ஆதரவாக வாதாடவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, வங்காளதேசத்தின் சட்டோகிராமில் மற்றொரு இந்து மதத் தலைவர் ஷியாம் தாஸ் பிரபுவும் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர, இதே சட்டோகிராமில் அடுத்தடுத்து 3 இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்த நிலையில், இந்திய தூதர் பிரனய் வர்மா டாக்கா சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராம் தாஸ், இந்து மதத்தை பின்பற்றும் பக்தர்களுக்கு ஒரு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளார். பொது இடங்களில் காவி நிற ஆடைகளையும் குங்கும திலகத்தையும் அணியாமல் இருக்க பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தங்கள் வீடுகள் அல்லது கோயில் வளாகங்களில் சாமி கும்பிட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர், “வங்காளதேசத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எங்களை அழைத்துவரும் துறவிகள் மற்றும் பக்தர்கள், இஸ்கான் ஆதரவாளர்கள் அல்லது துறவிகள் என்ற அடையாளத்தை பகிரங்கமாக மறைக்கும்படி அவர்களிடம் கூறியுள்ளோம். வீடுகளுக்குள்ளோ அல்லது கோயில்களுக்குள்ளோ தங்கள் நம்பிக்கையை புத்திசாலித்தனமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டோம். கவனத்தை ஈர்க்காத வகையில் ஆடை அணியுமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கை தற்காலிகமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த தாக்குதலை வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமன்றம் ஆகிய மூன்று பிரிவுகளின் மூலம் ஒரு நாடு செயல்படுகிறது. இதன்காரணமாகவே இந்துக்கள், சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். இது ஒரு புரட்சி அல்ல, ஆனால் கவனமாக திட்டமிடப்பட்ட படுகொலை. இதன் மூளையாகச் செயல்படுபவர் யூனுஸ்தான். அவர்கள் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் என்னை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். என்னைச் சிறையில் அடைப்பதும், விசாரணைக்கு உட்படுத்துவதும் மட்டுமே அவர்களின் கவனமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்தியாவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என முழு விவரம் தெரியவில்லை. அதேநேரத்தில், அவர் பேசியதாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக வெடித்தது. இதையடுத்தே அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவுக்குப் பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் அங்கு, தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் ஒருகாலத்தில் கணிசமான மக்கள்தொகையில் இருந்த இந்துக்கள், சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளனர். சிறுபான்மை சமூகம் இப்போது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 8 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.