உலகம்

“ஆம்! நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்

webteam

ஜெர்மனியில் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.  

ஜெர்மனியைச் சேர்ந்த நீல்ஸ் ஹோகெல் (41). இவர் ஒரு ஆண் நர்ஸ். இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு டாக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார். இவர் மீது முதலில் கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2005 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குப் பல்வேறு அதிர்ச்சிகரமான திருப்பங்களை எட்டியுள்ளது. டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தக் கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது. கொலைக்கான நோக்கம் என்பது குறித்து விசாரிக்கவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுக்க ஹோகெல் அனுமதிக்கப்பட்டாரா?,  இரண்டு ஜெர்மன் மருத்துவமனைகளும் நீண்ட காலமாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலை செய்வது என்பது அவனின் நோக்கம் இல்லை என அவனை விசாரித்த மனநல மருத்துவர் ஒருவர் கூறியிருந்தது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “உண்மையை அறிய வேண்டும் என்றே விரும்புகிறோம். தற்போது இருட்டு அறைகள் கொண்ட வீடாக வழக்கு உள்ளது. இருளுக்கு நடுவே வெளிச்சத்தை பரப்ப விரும்புகிறேன்” என்றார். குற்றச்சாட்டுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன் என்பதை ஹோகெல் ஒப்புக் கொண்டார். தொடங்கிய உடனே அவர் இப்படி பகிரங்கமான குற்றத்தை ஒப்புக் கொண்டது நீதிமன்றத்தில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஊசிப் போட்டு கொல்வதை அனுமதித்ததற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடியவர் ஒருவர் கூறினார்.

என்ன செய்தார் ஹோகெல்?

டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு ஹெவி டோஸ் ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்த நீல்ஸ் ஹோகெல் இதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சிகிச்சை அளித்த பின்னர் தொடர்ச்சியாக மரணமடைந்தனர்.

வழக்கு விவரம் :-

2005 ஆம் ஆண்டு டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஹோகெலுக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

ஹோகெல் கொடுத்த மருந்துகளின் விளைவாக சிலர் உயிரிழக்க, அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

அந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது. 

பின்னர், மனநல மருத்துவரிடம் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் 30 கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவர் பணிபுரிந்த ஓல்டுபர்க் மருத்துவமனையில் நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 

விசாரணை மேற்கொண்ட போலீசார் 200க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 34 வயது முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

2008 முதல் சுமார் 10 ஆண்டுகள் ஹோஜல் சிறையில் இருந்துள்ளார். அவர் மீதான வழக்கு தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.