கேப்ரியல் ஒலுவாசெகுன் ஒலன்ரெவாஜு எக்ஸ் தளம்
உலகம்

கானா | போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர்!

போட்டியின்போது, மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின்போது, மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேப்ரியல் ஒலுவாசெகுன் ஒலன்ரெவாஜு

நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர், கேப்ரியல் ஒலுவாசெகுன் ஒலன்ரெவாஜு (32). தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை முன்னாள் சாம்பியன் ஆவார். இவர், கடந்த மார்ச் 29ஆம் தேதி, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது கானா நாட்டு வீரரான ஜான் எம்பனுகு என்பவருக்கு எதிரான போட்டியின் மூன்றாம் சுற்றில் கேப்ரியல் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 30 நிமிட தீவிர சிகிச்சைக்குப் பின் கேப்ரியல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், அவரது மரணத்திற்கு நைஜீரிய குத்துச்சண்டை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, கேப்ரியல் போட்டியிட்ட 23 போட்டிகளில் அவர் 13 முறை வெற்றியும் 8 முறை தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.