உலகம்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே!

நிவேதா ஜெகராஜா

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று காலை ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்த அபே, உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஷின்சோ அபே, ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நரா என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த ஷின்சோ அபே திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்ததார்.

ஆனால், ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அப்போது அவரது உடலில் ரத்தம் வழிந்தோடுவதை பார்த்ததாகவும் என்.ஹெச்.கே.என்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியானது. பின் ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத பல தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.