உலகம்

போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திலிருந்து விலகியது இலங்கை

webteam

இலங்கை போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பேற்பு பற்றிய ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அந்த நாடு ஐநாவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இலங்கை இறுதி போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐநா மனித உரிமை கவுன்சிலில் கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் முன்மொழிந்திருந்தது.

இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 43-வது கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணர்வர்தனே இந்த தீர்மானத்தில் இணைந்ததில் முந்தைய அரசு தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டி தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், “தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயல்படுத்த முடியாது.
கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறி விட்டது. குறிப்பாக இந்த ஜெனீவா தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அதனை காண்பிக்கவில்லை” என்று அமைச்சர் குணர்வர்தனே குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் முந்தைய விசாரணைகள் குறித்து ஆய்வு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.