உலகம்

”வெளிநாட்டு சதிக்கு எதிராக இளைஞர்கள் போராடுங்க”-நாளை வாக்கெடுப்பு.. இன்று இம்ரான் அழைப்பு

ஜா. ஜாக்சன் சிங்

"எனது அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடக்கிறது; இதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் எனக் கூறி வரும் எதிர்க்கட்சிகள், அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதனிடையே, இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த பல கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சி அணியில் இணைந்துவிட்டதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலத்தை அவர் இழந்துவிட்டார். இதனால் இம்ரான் கானின் ஆட்சி கவிழப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருந்தபோதிலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்து வருகிறார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக பிரதமர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அவர் கூறுகையில், "எனக்கு முன்பு பாகிஸ்தானில் ஆட்சி செய்தவர்கள், சில வெளிநாடுகளுக்கு அடிமையாக இருந்தனர். மக்கள் நலனுக்கு எதிரானது என்றாலும் கூட, அந்த வெளிநாட்டு சக்திகளுக்கு பயந்து அந்த காரியங்களை அவர்கள் செய்து வந்தனர். இதனால் பாகிஸ்தான் அனைத்து நிலைகளிலும் சரிவை சந்தித்து வந்தது.

ஊழல்வாதிகளான அவர்கள், வெளிநாடுகளிடம் இருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு இந்த வேலையை செய்தனர். ஆனால், நான் பிரதமராக பொறுப்பேற்றதும், பாகிஸ்தானுக்கு என சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்தேன். சில வெளிநாட்டு சக்திகளின் நிர்பந்தங்களுக்கு நான் கட்டுப்படவில்லை.

பாகிஸ்தானின் எதிர்காலம் மட்டுமே எனக்கு பெரிதாக தெரிந்தது. இதனால், தற்போது வெளிநாட்டு சக்திகள் பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு எனது அரசை கவிழ்க்க முயற்சிக்கிறது. இதனை நான் நிச்சயம் முறியடிப்பேன். இந்த சதிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் எழுச்சிப் பெற்று போராட வேண்டும். மக்கள் எழுச்சி அடைந்தால், தீய சக்திகள் தூர விலகி விடும்" என இம்ரான் கான் கூறினார்.