global temperatures rising continuously 6 days Reuters
உலகம்

6 நாளில் மொத்தமாக மாறிய இயற்கை : வரலாற்றில் முதல்முறை என ஆய்வாளர்கள் அதிர்ச்சி.. பாதிப்புகள் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக உலகின் வெப்ப நிலை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Praveen Joshva L

உலக வெப்பமயமாதல் காரணமாக 6 நாட்கள் தொடர்ந்து உலகின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் பதிவாகியது. இது வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் என் நினோ, லா நினா போன்ற வானிலை மாற்றங்கள் தற்போது அதிகளவில் ஏற்பட்டு வரும் நிலையில், இதற்கு உலக வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகவெப்பமயமாதல் காரணமாக துருவப்பகுதியில் பனி உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்தல், பருவநிலைகளில் மாற்றம் போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலைத் தரவு மற்றும் பகுப்பாய்வு அமைப்பான கோப்பர்நிக்கஸ் (Copernicus Climate Change Service - C3S) அமைப்பு, கடந்த நவம்பர் 18 முதல் நவம்பர் 23-ம் தேதி வரையிலான 6 நாட்களில் உலகின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து 6 நாட்கள் 2 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெப்பம் பதிவாகுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் நவம்பர் 23-ம் தேதி 2.24 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகி உலகிலேயே அதிகம் வெப்பமான நாள் என சாதனை படைத்ததாகவும் கோப்பர்நிக்கஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நவம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2024 ஆகிய மாதங்களில் உலகின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் பதிவானதாகவும், ஆனால் அது ஒரு நாள் மட்டுமே ஏற்பட்டது, தற்போது 6 நாள் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது அசாதாரண நிகழ்வு என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக கடந்த கோடையில் ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் 50,000-க்கும் மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 5,000 பேரும் வெப்பத்தால் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு தற்போது சூப்பர் எல் நினோ உருவாகவும் உலக வெப்பமயமாதலே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ்க்கு உயர்வது வரும் காலத்தில் பேரழிவுகளை கொடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.