உலகம்

மைதானத்தில் விலகிய மூட்டை கையால் அடித்து நேர்ப்படுத்திய வீராங்கனை (வீடியோ)

webteam

போட்டியின்போது மூட்டு விலகிய நிலையில், வலியையும் பொருட்படுத்தாமல் தானே அதனை சரிசெய்யும் வீராங்கனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்காட்டிஷ் கால்பந்து அணி மற்றும் இன்வெர்னஸ் கலிடோனியன் ஆகிய அணிகளுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்காட்டிஷ் அணி எதிரணியை விட 6-0 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தது. இதனால் ஸ்காட்டிஷ் அணியினர் அதி தீவிரமாக விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது மைதானத்தில் ஸ்காட்டிஷ் கால்பந்து அணியின் கேப்டன் ஜேன் ஓ டூல், பந்தைக் கடத்தி செல்லும்போது சக வீராங்கனையுடன் மோதி விட்டார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரின் வலது கால் மூட்டு எலும்பு விலகியது. ஆனால் யாரையும் உதவிக்கு அழைக்காத அவர், மாறாக தனது காலில் இருந்து நகர்ந்த முழங்காலை தனது கையால் சுத்தியலை வைத்து சரி செய்வதுபோல அடித்து நேர்ப்படுத்தினார். அதன் பின்னர் அவர் மீண்டு எழுந்து ஆட்டத்தில் கலந்து கொண்டார்.

ஜேன்னின் இந்தச் செயலை பார்த்த சகவீரர்கள் ஆச்சரியப்பட்டனர். இதனையடுத்து ஜேன் தனது காலை சரி செய்த வீடியோவை செயின்ட் மிர்ரன் பெண்கள் கால்பந்து  அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜேன்னை பாராட்டியுள்ளனர்.