உலகம்

பதிலளிக்க முடியாமல் திணறிய பெண்: கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

ச. முத்துகிருஷ்ணன்

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் ரொனால்டோ கடந்த 2009ஆம் ஆண்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

லாஸ் வேகாஸில் இருக்கும்போது சர்வதேச கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேத்ரின் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு இழப்பீடாக 3,75,000 டாலர் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, ரொனால்டோவின் சட்டக் குழு அளித்த பதில் மனுவில், புகார் அளித்த பெண்ணும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டனர்.

இதனை பாலியல் வன்கொடுமையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று வாதிட்டனர். இந்த வாதத்திற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர்கள் குழு சரியான பதிலை தெரிவிக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்து லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 42 பக்க தீர்ப்பில் கேத்ரின் மேயோர்காவின் வழக்கறிஞர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.