ஸ்மித் மச்சார் reuters
உலகம்

நடுவானில் திக்திக் சம்பவம்.. அறைக் கதவைத் திறந்த இந்திய கேப்டன்.. அலறியபடி சென்ற 4 பேர்!

இதற்கிடையே, பணி ஓய்வில் இருந்த இரண்டு விமானிகள் உள்ளே நுழைந்து, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாதுகாப்பாக தரையிறக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

Prakash J

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் நடுவானில் நடந்த திடுக்கிடும் சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. நடுவானில் நடந்தது என்ன, கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடிய இந்திய கேப்டன் 170க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியது எப்படி? அவருக்கு உதவி செய்தவர்கள் யார்? அலசுகிறது இந்தக் கட்டுரை..

துபாயிலிருந்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் 737 MAX 8 ரக விமானத்தில், அதன் இணை விமானி திடீரென முதன்மை விமானியான இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்தினார். தாக்குதலின்போது விமானத்தின் கட்டுப்பாடு பாதிக்கப்பட்டதால், விமானம் வெறும் 30 நொடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் வேகமாகக் கீழே சரிந்து பெரும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது. கத்தியால் குத்தப்பட்டு உடலில் தீவிர காயங்கள் ஏற்பட்டு, கடுமையாக ரத்தம் வெளியேறிய நிலையிலும் கேப்டன் ஸ்மித் மனஉறுதியை இழக்காமல் தாக்குதல் நடத்திய இணை விமானியை எதிர்த்துப் போராடினார்.

Fly dubai

மேலும், பதற்றமான சூழலிலும் சமயோசிதமாகச் செயல்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அவசரநிலைக் குறியீட்டை அனுப்பியதோடு, பூட்டப்பட்டிருந்த காக்பிட் (Cockpit) கதவை உள்ளிருந்து திறந்து வைத்தார். இதனால் சில பயணிகளும் பணியில் இல்லாத இரண்டு விமானிகளும் உள்ளே சென்று துணை விமானியிடமிருந்து விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதுகாப்பாய் தரையிறக்கி உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், விமானம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் செங்குத்தாகக் கீழே விழுந்தபோதும், அதன் வால் பகுதியில் இருந்த சுக்கானின் பெரும்பகுதி சேதாரமானபோதும், அந்த விமானம் சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இதில் இந்திய கேப்டனுக்கு உதவியாக இருந்தவர்களில் முக்கியமான 4 பயணிகளும் அடங்குவர். அவர்களும் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் விமானத்தின் காக்பிட்டை நோக்கி விரைந்தனர். அந்த நால்வரில் ஒரு பிளம்பர் (யானிவ் ஹயூன்), ஒரு பல் மருத்துவர் (டாக்டர் ஷோட்டா மூசாயேவ்), ஒரு காப்பீட்டு நிறுவன உரிமையாளர் (அசாஃப் ரஜுவான்), ஒரு வங்கியாளர் (ஸ்விகா மானெஸ்) உள்ளிட்டவர்கள் ஆவர் எனக் கூறப்படுகிறது.

இதில், பலமிக்க துணை விமானியை அடக்கியவர் இஸ்ரேலிய பிளம்பரான யானிவ் ஹயூன். தவிர, விமானம் ஆபத்தான முறையில் கீழ்நோக்கிக் இறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவர், அது மேலும் கீழே இறங்குவதைத் தடுக்க, ஸ்டீயரிங் நெம்புகோல்களை மேல்நோக்கி இழுத்துள்ளார். இதற்கிடையே, பணி ஓய்வில் இருந்த இரண்டு விமானிகள் உள்ளே நுழைந்து, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாதுகாப்பாக தரையிறக்கவும் முயற்சி செய்துள்ளனர். மேலும், பல் மருத்துவர் ஷோட்டா மூசாயேவ் சரியான நேரத்தில் உள் நுழைந்து இந்திய விமானிக்கு முதலுதவி அளித்துள்ளார்.