உலகம்

ஹெலிகாப்டர்கள் மீது மோதியது விமானம்: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்

webteam

நேபாள நாட்டில் நின்ற ஹெலிகாப்டர்கள் மீது சிறிய ரக விமானம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பே படுகாயமடைந்தனர்.

நேபாள நாட்டின் சொலுகும்பு (Solukhumbu) மாவட்டத்தில் அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். மலை மீது அமைந்து ள்ள மிகவும் சிறிய விமான நிலையமான இங்கு, சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இமயமலையின் அழகைச் சுற்றிக் காண்பிக்கும். இதற்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் வருவது வழக்கம். இன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. 

இதையடுத்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில் விமானி ரோகல்யா, துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் இருந்தனர்.

அப்போது திடீரென்று நிலைதடுமாறிய அந்த விமானம், அங்கு நின்றிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது பலமாக மோதியது. இதில், விமானம் கடுமையாக சேதமடைந்தது. சிறிய ரக விமானத்தில் இருந்த துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர்களில் இருந்த சேட் குருங்க், பாதுகாப்பு அதிகாரி, ஒரு விமானப்பணிப்பெண் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மண்ட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது.