ஹெச்.ஐ.வி. வைரஸிலிருந்து மீண்ட உலகின் முதல் நபருக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு, எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணமடைந்த நபராக அறிவிக்கப்பட்டார். தி பெர்லின் பேஷன்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்தான், சர்வதேச அளவில் முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீக்கப்பட்ட உலகின் முதல் நபர் ஆவார்.
ஸ்டெம்செல்’ மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குணமடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதுவரையில் அவருக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
திமோதி பிரவுன் ஹெச்.ஐ.வி-யால் பாதிப்பட்டிருந்தபோது, கூடுதலாகப் புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாகியிருந்தார். அதனால், அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரவுனின் எலும்பு மஜ்ஜை முழுவதுமாக நீக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட மஜ்ஜைகள் பொருத்தப்பட்டன.
எனினும் அவருக்கு புற்றுநோய் முழுமையாக குணமாகவில்லை. தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது 54 வயதான திமோதி பிரவுனுக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.