நேபாள லெஸ்பியன் ஜோடி
நேபாள லெஸ்பியன் ஜோடி pti
உலகம்

நேபாளம்: முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக திருமணத்தைப் பதிவுசெய்த லெஸ்பியன் ஜோடி!

Prakash J

மேற்கு நேபாளத்தில் உள்ள பர்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு தேவி ஸ்ரேஸ்தா. இவரது புனைபெயர் திப்தி. சியாங்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரிதா குருங். இவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி பர்டியா மாவட்டத்தின் ஜமுனா கிராமப்புற நகராட்சியில் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடனே திருமணப் பதிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தன்பாலினசேர்க்கை ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் பாபு பாண்டா, ‘தெற்காசியாவிலேயே முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தங்கள் திருமணத்திற்காக பதிவு செய்த லெஸ்பியன் ஜோடி இவர்கள்தான்’ எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தெற்காசியாவிலேயே ஒரேபாலின திருமணத்தை முறையாக பதிவுசெய்த முதல் நாடாக நேபாளம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இதற்குமுன்பு, கடந்த ஆண்டு நேபாளத்தில் மாயா குருங் (வயது 35) என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே (வயது 27) என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டப்பூர்வமாக நடைபெற்ற திருமணத்தைப் பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையும் படிக்க: பீகார்: மாயமான 6 எம்எல்ஏக்கள்.. மாறிய 3 பேர்.. ஆட்சியைத் தக்கவைத்த நிதிஷ்.. நீக்கப்பட்ட சபாநாயகர்!

அதாவது, நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம், கடந்த 2007ஆம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் நேபாளத்தில் மாயா குருங் மற்றும் சுரேந்திர பாண்டே ஆகியோரது திருமணத்தைப் பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

model image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 27 அன்று தன் பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஓரினச்சேர்க்கை திருமணத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான வரலாற்று உத்தரவு இருந்தபோதிலும், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் 4 மாதங்களுக்கு முன்பு தேவையான சட்டங்கள் இல்லாததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை நிராகரித்தது. அந்த சமயத்தில் சுரேந்திர பாண்டே மற்றும் மாயாவின் திருமண விண்ணப்ப பதிவு நிராகரிக்கப்பட்டது. இதன்பின், உச்சநீதிமன்றம் தன்பாலினத் திருமணங்கள் பதிவு செய்ய சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், மாயா குருங் - சுரேந்திர பாண்டே திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டது.

இதையும் படிக்க: சந்தேஷ்காலியில் ஆளுநர் போஸ்; மம்தா அரசுக்கு எதிராக புயலை கிளப்பும் பாலியல் வன்கொடுமை புகார்!